விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு போட்டியாக சன் டிவியில் பராசக்தி ஆடியோ லாஞ்சும் ஒளிபரப்பான நிலையில், அதன் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது.
Jana Nayagan vs Parasakthi Audio Launch TRP Rating
விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயன் படமும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்தது. விஜய்யின் கடைசி படத்தை சோலோவாக ரிலீஸ் ஆக விடாமல் வேண்டுமென்றே பராசக்தி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார்கள் என்கிற விமர்சனமும் இருந்தது. ஆனால் இந்த மோதல் குறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது இது அண்ணன் - தம்பி பொங்கல் என கூறி இருந்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
24
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா
ஜனநாயகன் படம் ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்ததால், அதன் இசை வெளியீட்டு விழாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி மலேசியாவில் உள்ள புக்கெட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்தினர். இந்த இசை வெளியீட்டு விழாவில் மொத்தம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால், இதன் இசை வெளியீட்டு விழாவை தளபதி திருவிழாவாக நடத்தினர். அந்த விழாவில் விஜய்யின் படங்களில் இடம்பெற்ற ஐகானிக் பாடல்களை பாடி இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது. இந்த ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பும் உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றி இருந்தது.
34
பராசக்தி இசை வெளியீட்டு விழா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ஜனவரி 10ந் தேதி திரைக்கு வந்த படம் பராசக்தி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 3-ந் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த மறுநாளே அவசர அவசரமாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் ஜனவரி 4-ந் தேதி மாலை ஒளிபரப்பான அதே நேரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழாவும் ஒளிபரப்பானது.
இந்த நிலையில், போட்டிபோட்டு ஒளிபரப்பான ஆடியோ லாஞ்சுகளின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவுக்கு 6.74 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. அதற்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெறும் 3.02 டிஆர்பியை மட்டுமே பெற்றிருக்கிறது. இதன்மூலம் ஜனநாயகனின் பாதி அளவு வரவேற்பு கூட பராசக்திக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால், அதன் இசை வெளியீட்டு விழாவை மக்கள் ஆர்வத்தோடு கண்டுரசித்துள்ளனர்.