தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்கள், வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவை UPI சேவையிலிருந்து நீக்கப்படும். அதாவது, PhonePe, Paytm, Google Pay போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.
சைபர் குற்றங்கள் அதிகரிப்பு:
இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் தான். நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்கள், தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி, மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் என NPCI எச்சரித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயன்படுத்தப்படாத எண்களை மீண்டும் மற்றவர்களுக்கு வழங்கும் போது, மோசடி செய்பவர்கள் அவற்றை பயன்படுத்தி வங்கி கணக்குகளில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.
பயனர்கள் கவனத்திற்கு:
UPI சேவையை தடையின்றி பயன்படுத்த, உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம். உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்கள் எண்ணின் நிலையை சரிபார்க்கவும். நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் அல்லது பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக அதை ரீசார்ஜ் செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். அல்லது, உங்கள் வங்கி கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்கவும்
வங்கி மற்றும் UPI செயலிகளுக்கு உத்தரவு:
செயல்படாத மொபைல் எண்களின் பதிவுகளை வாரந்தோறும் சரிபார்க்கும்படி வங்கிகள் மற்றும் UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், செயல்பாட்டில் உள்ள எண்கள் மட்டுமே வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டு, சைபர் குற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.