JIO Plan Price Hike
ஜியோ பிளான் விலை உயர்வு
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பினார்கள். இதனால் ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வந்தன.
அந்த வகையில் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்த ஜியோ, மீண்டும் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்த ஜியோ இப்போது மீண்டும் ஒரு பிளானின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் அதன் அடிப்படை ரூ.199 போஸ்ட்பெய்டு திட்டத்தில் அதிரடியாக 100 ரூபாய் விலையை உயர்த்தி ரூ.299 என உயர்த்தியுள்ளது.
JIO Postpaid Plan
விலை உயர்வு எப்போது அமல்?
ஜனவரி 23ம் தேதி முதல் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.199க்கு பதிலாக ரூ.299 செலுத்த வேண்டும் என்று BT அறிக்கை தெரிவிக்கிறது. விலை உயர்த்தப்பட்ட இந்த ரூ.299 மாதாந்திர போஸ்ட்பெய்டு திட்டத்தில் மொத்தமாக உங்களுக்கு 25 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். மேலும் இலவச தேசிய ரோமிங் உள்பட அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகள் உள்ளன.
அதே வேளையில் புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் மிகக் குறைந்த திட்டம் ரூ.349ல் இருந்து தொடங்குகிறது. இந்த பிளானில் அன்லிமிடெட் கால்ஸ் செய்ய முடியும். மேலும் 30 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். வரம்பற்ற 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும். இது தவிர தேசிய ரோமிங், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை உங்களுக்கு கிடைக்கும்.
ஐபோன் 17 அப்டேட்: iOS 19 உடன் புதிய டிசைனில் சூப்பர் கேமரா!
JIO Budget Plan
ஜியோ பேமிலி பேக் பிளான்
இது மட்டுமின்றி ஜியோ நிறுவனம் ரூ.449 விலையில் குடும்பத் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக 75 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். 5G சேவையை தடையின்றி கூடுதல் பைசா செலவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தில் மூன்று கூடுதல் எண்களைச் சேர்க்கலாம்.
ஆனால் ஒவ்வொரு கூடுதல் எண்ணுக்கும் ரூ.150 மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக, அனைத்து இரண்டாம் நிலை எண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TRAI New Rules
டிராய் போட்ட உத்தரவு
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவையும் சேர்த்து ஒரே பிளானை கொண்டுள்ளன. இதனால் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டும் தேவைப்படுபவர்கள் தேவையின்றி டேட்டாவையும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு மட்டும் தனியாக பிளான்கள் கொண்டு வர வேண்டும் என ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையமான டிராய் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் விலை குறைப்புக்கு மாற்றாக, ஜியோ விலையை அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
4 மாதங்கள் வேலிடிட்டி; 20 ரூபாய் போதும்; டிராய் புதிய விதியால் இவ்வளவு நன்மைகளா?