நம்பரை மாற்றினால் வாட்ஸ்அப் பிரைவசி கேள்விக்குறி? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

First Published | Nov 7, 2023, 5:10 PM IST

ப்ரீபெய்டு மொபைல் பயனர்கள் தங்கள் எண்ணை மாற்றுவது  குறித்து உச்ச நீதிமன்றம் முக்கியமான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றிவிட்டால் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த எண்களை மற்ற சந்தாதாரர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யலாம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கு அவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், எண்ணை மாற்றும்போது தங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழிப்பதும் பயனர்களின் பொறுப்புதான் என்றும் கூறியுள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குப் பின் செயலிழக்கும் அல்லது துண்டிக்கப்படும் மொபைல் எண்களை புதிய சந்தாதாரர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதிக்க முடியாது. மொபைல் எண்ணை மாற்றும்போது அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் டேட்டாவையும் அழித்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

90 நாட்கள்

ஒரு ப்ரீபெய்டு மொபைல் பயனர் தனது எண்ணை மாற்றினால், அவர் பயன்படுத்திவந்த பழைய எண் 90 நாட்களில் காலாவதியாகிவிடும். இந்தத் 90 நாட்களுக்குப் பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனம் அதே எண்ணை புதிய வாடிக்கையாளருக்கு ஒதுக்கலாம்.

முந்தைய தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதன் மூலமும், கிளவுட் மெமரியில் சேமிக்கப்பட்ட வாட்ஸ்அப் தரவை அழிப்பதன் மூலமும் வாட்ஸ்அப் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம். தங்கள் பிரைவசி பறிபோகாமல் இருக்க முந்தைய பயனர்கள் தான் போதுமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tap to resize

டிராய்

காலாவதியான மொபைல் எண்களை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ராஜேஸ்வரியின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்த டிராய், ஏப்ரல் 2017 இல் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. "சந்தாதாரரின் கோரிக்கையின் பேரில் லாக் செய்யப்பட்ட அல்லது பயன்படுத்தமால் இருந்ததால் காலாவதியான மொபைல் எண்கள் 90 நாள்களுக்கு வேறு எந்த சந்தாதாரருக்கும் ஒதுக்கப்படாது" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

வாட்ஸ்அப்

இது தவிர, MNRL என்ற நிரந்தரமாக துண்டிக்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலையும் டிராய் பராமரிக்கிறது. இதன் மூலம் அந்த எண்கள் குறித்த தரவுகள் அழிக்கப்படுவதுடன் அந்த மொபைல் எண்களுக்கு OTP மெசேஜ் அனுப்பப்படுவதையும் தடை செய்துள்ளது. இந்த வசதி வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, செபி போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும் என டிராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், வாட்ஸ்அப் தனது பயனர்களின் தரவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, தொடர்ந்து 120 நாட்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத வாட்ஸ்அப் கணக்குகளை நீக்கிவிடுகிறது.

Latest Videos

click me!