OpenAI ChatGPT-ல் விளம்பரங்கள் வருவதாக எழுந்த புகாருக்கு OpenAI மறுப்பு தெரிவித்துள்ளது. அது விளம்பரம் இல்லை, ஆப் பரிந்துரைகள் என விளக்கம் அளித்துள்ளது.
ChatGPT தளத்தில், குறிப்பாகப் பணம் செலுத்திப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு (Plus Users) விளம்பரங்கள் காட்டப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவின. சாட் பாக்ஸில் பதில்களுக்குக் கீழே பிராண்டுகளின் விளம்பரங்கள் வருவது போன்ற ஸ்கிரீன்ஷாட்கள் வைரலானதால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், "நாங்கள் எந்த விளம்பரங்களையும் சோதனை செய்யவில்லை" என்று ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. பயனர்கள் பார்த்தது விளம்பரங்கள் அல்ல என்றும், அவை பார்ட்னர் நிறுவனங்களின் செயலி பரிந்துரைகள் (App Suggestions) என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
25
வைரலான ஸ்கிரீன்ஷாட் மற்றும் குழப்பம்
டிசம்பர் 3 அன்று, பெஞ்சமின் என்ற 'எக்ஸ்' (X) தள பயனர் ஒருவர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். அவர் விண்டோஸ் பிட்லாக்கர் (Windows BitLocker) குறித்துத் தேடும்போது, அமெரிக்காவின் ரீடைல் நிறுவனமான 'Target'-ன் விளம்பரம் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். "நான் பணம் செலுத்திப் பயன்படுத்தும் சந்தாதாரர், ஆனாலும் எனக்கு ஏன் விளம்பரம் வருகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று வைரலானதால், ஓபன் ஏஐ நிறுவனம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
35
இது விளம்பரம் இல்லையாம்.. ஆப் பரிந்துரையாம்!
இதற்குப் பதிலளித்த ஓபன் ஏஐ டேட்டா சயின்டிஸ்ட் டேனியல் மெக்காலே, "நீங்கள் பார்ப்பது விளம்பரம் அல்ல. இது ChatGPT-யுடன் இணைக்கப்பட்ட செயலி (Integrated App). பயனர்களுக்கு உதவும் வகையில் இயல்பாகவே ஆப்களைப் பரிந்துரைக்கும் ஒரு சோதனை முயற்சியே இது" என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், பயனர்கள் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. "தேவையில்லாத நேரத்தில், தொடர்பில்லாத பிராண்டுகளைப் பரிந்துரைப்பது விளம்பரத்திற்குச் சமம் தானே?" என்று அவர்கள் எதிர்வாதம் செய்தனர்.
பயனர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் சென் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். "இந்த ஆப் பரிந்துரைகள் நாங்கள் எதிர்பார்த்தது போலச் சரியாக அமையவில்லை" என்பதை ஒப்புக்கொண்ட அவர், இந்த வசதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும், இந்த அம்சத்தை இன்னும் துல்லியமாக மேம்படுத்திய பிறகும், பயனர்கள் விரும்பினால் அதை நிறுத்திக்கொள்ளும் (Disable) வசதியுடனும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
55
எதிர்காலத்தில் விளம்பரம் வருமா?
இது குறித்துப் பேசிய ChatGPT-யின் தலைவர் நிக் டர்லி, "எங்கள் நிறுவனத்தில் தற்போது எந்த விளம்பர சோதனையும் நடைபெறவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இணையத்தில் வலம் வரும் பல ஸ்கிரீன்ஷாட்கள் உண்மையானவை அல்ல என்றும் கூறினார். ஒருவேளை எதிர்காலத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தினால், அது மிகவும் வெளிப்படையானதாகவும், பயனர்களின் நம்பிக்கையைப் பாதிக்காத வகையிலும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.