
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய முறை, சிறந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகையை வழங்கும் நோக்கம் கொண்டது. கூகுள் துணைத் தலைவர் ஜான் கேசி அனுப்பிய மின்னஞ்சலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாம் நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைய உயர் செயல்திறன் முன்பை விட முக்கியமானது" என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து செயல்படத் தொடங்கியுள்ள கூகுள், தற்போதுள்ள ஊழியர்களின் செயல்திறனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த சம்பள மாற்றத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே, வீட்டில் இருந்து பணிபுரியும் கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள கூகுள், தற்போது சம்பளத்திலும் தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது போல் தெரிகிறது.
சம்பள கட்டமைப்பில் மாற்றம் என்ன?
கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களின் செயல்திறனை அளவிடும் "கூகிளர் ரிவியூஸ் அண்ட் டெவலப்மெண்ட்" (GRAD) முறையில் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கும். இனிமேல் மேலாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு "அவுட்ஸ்டாண்டிங் இம்பாக்ட்" (Outstanding impact) என்ற உயர்வான மதிப்பீட்டை வழங்க முடியும். இந்த மதிப்பீடு அவர்களின் ஊதியத்தை நேரடியாக பாதிக்கும். முன்னதாக, பெரும்பாலான ஊழியர்கள் "சிக்னிஃபிகண்ட் இம்பாக்ட்" (Significant impact) என்ற சராசரி மதிப்பீட்டையே பெற்று வந்தனர். "நாட் எனஃப் இம்பாக்ட்" (Not enough impact) முதல் "டிரான்ஸ்ஃபார்மேடிவ் இம்பாக்ட்" (Transformative impact) வரை இந்த மதிப்பீட்டு முறை இருந்தது. "அவுட்ஸ்டாண்டிங் இம்பாக்ட்" மதிப்பீட்டை வழங்கும் மேலாளர்களுக்கு கூடுதல் discretionary budget வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
"எங்கள் செயல்திறன் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பிலான அந்த மின்னஞ்சலில், இந்த மாற்றங்கள் பட்ஜெட்டுக்கு நடுநிலையானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, "சிக்னிஃபிகண்ட் இம்பாக்ட்" மதிப்பீட்டிற்கு வெளியே இருப்பவர்களுக்கு போனஸ் தொகை சற்று குறைக்கப்படும். "இதற்கான நிதியை திரட்டுவதற்காக, 'சிக்னிஃபிகண்ட் இம்பாக்ட்' மற்றும் 'மாடரேட் இம்பாக்ட்' மதிப்பீடுகளைப் பெற்றவர்களுக்கான போனஸ் மற்றும் பங்கு தனிநபர் பெருக்கிகளை சற்று குறைக்கவுள்ளோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு இதன் பொருள் என்ன?
"சிக்னிஃபிகண்ட் இம்பாக்ட்" மதிப்பீடு இன்னும் வலுவாக இருக்கும் என்றும், அதை அடைபவர்கள் இலக்கு போனஸை விட அதிகமாகப் பெறுவார்கள் என்றும் அந்த மின்னஞ்சல் உறுதியளிக்கிறது. இருப்பினும், குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது.
சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 32 மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் 10.7 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளார், அதில் 8.2 மில்லியன் டாலர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூகிளின் தாய் நிறுவனமான Alphabet, இது நிறுவனம் மற்றும் பங்குதாரர்களின் நலன்களுக்கு உகந்தது என்று நியாயப்படுத்தியுள்ளது.
கூகிளின் இந்த புதிய சம்பள முறை மாற்றம், அதிக திறமை கொண்ட ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளவும், ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சராசரி மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்கள் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.