Flipkart: பிளிப்கார்ட் 'பே லேட்டர்' சேவையை மிந்த்ரா, பிளிப்கார்ட் மினிட்ஸிலும் அறிமுகம் செய்துள்ளது. இதில் 30 நாட்கள் அவகாசம், 'Pay in 3' மற்றும் 3-12 மாத EMI என 3 வழிகளில் பணம் செலுத்தலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவர 'இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்' (Buy Now, Pay Later - BNPL) என்ற வசதியை அதிகளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், பிளிப்கார்ட் நிறுவனம் 'பிளிப்கார்ட் பே லேட்டர்' என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிய பிறகு, அதற்கான பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு செலுத்தலாம் அல்லது தவணைகளாகப் பிரித்துக் கட்டலாம்.
PayU பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி, பிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகிய தளங்களில் கிடைக்கும். இதில் மூன்று விதமான பேமெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன.
1. தினசரி வாங்கும் பொருட்களுக்கு 30 நாட்கள் வரை அவகாசம்.
2. பில் தொகையை மூன்று சமமான தவணைகளாகப் பிரிக்கும் 'Pay in 3' வசதி.
3. ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு 3 முதல் 12 மாதங்கள் வரையிலான EMI வசதி.
இந்த சேவை, தினசரி ஷாப்பிங் மற்றும் பெரிய அளவிலான ஏற்ற வகையில், செக்-அவுட் செய்யும்போதே கடன் வசதி கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷால் அஹுஜா கூறுகையில், "இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய, விலை ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அவர்களுக்குப் பொருள் வாங்க ஆசை இருந்தாலும், அதற்கான பண வசதி ஒரு தடையாக உள்ளது. இந்த வாடிக்கையாளர்களை நாங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடன் வசதியை வழங்குகிறோம்" என்றார்.
இந்த திட்டத்திற்காக PayU நிறுவனத்தின் நிதிச் சேவைப் பிரிவான PayU பைனான்ஸ் உடன் பிளிப்கார்ட் முதலில் கைகோர்த்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல நிதி நிறுவனங்கள் இதில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, PayU பைனான்ஸ் கடன் வழங்கும் நிறுவனமாகவும், பிளிப்கார்ட் பைனான்ஸ் வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிப்பது மற்றும் கடன் முடிவுகளுக்கு உதவுவது போன்ற பணிகளைச் செய்யும்.
வாடிக்கையாளரின் முந்தைய பரிவர்த்தனைகள், வாங்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் தளத்தில் அவர்களின் செயல்பாடு போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, யாருக்கு கடன் வழங்குவது என்பது முடிவு செய்யப்படும். இதன் மூலம் பாதுகாப்பான கடன் வழங்கல் உறுதி செய்யப்படுகிறது.
இந்தக் கூட்டணி குறித்து PayU பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரி தீபக் மெண்டிராட்டா கூறுகையில், "டிஜிட்டல் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கடன்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பிளிப்கார்ட் பைனான்ஸ் உடன் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த கடன் அனுபவத்தை வழங்குகிறோம். இது இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும்" என்றார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.