டெஸ்லா பங்குகளின் விலைகள் உயர்ந்ததால், எலோன் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெஸ்லா பங்குகள் சரிவைக் கண்டதால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் இருந்து எலான் மஸ்க் அகற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் நியமிக்கப்பட்டார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் மீண்டும் பணக்காரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
எலான் மஸ்கின் நிகர மதிப்பு இப்போது 187 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், அவரது நிகர மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து முதல் எலோன் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். அவருக்கு முன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அந்த இடத்தில் இருந்தார்..
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது டுவிட்டரை கைப்பற்றிய பிறகு, அதிக பணத்தை இழந்தவர் என்ற உலக சாதனை புரிந்தார். இது தொடர்பாக கின்னஸ் உலக சாதனை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இதற்கு முன்பு ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் 56 பில்லியன் டாலர்களை இழந்திருந்தார். அவரை மிஞ்சி சுமார் 58.6 பில்லியன் அமெரிக்க டாலரை எலான் மஸ்க் இழந்தார் என்று குறிப்பிடப்பட்டது.
எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா:
மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் பெரும்பகுதி டெஸ்லா பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தார், ஆட்டோமொபைல் நிறுவனத்திலும் மிகப்பெரிய பங்குகளை வைத்திருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மார்ட்டின் எபர்ஹார்ட், மார்க் டார்பெனிங் ஆகியோரால் டெஸ்லா மோட்டார்ஸ் என நிறுவப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், மஸ்க் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரானார். பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக பொறுப்பேற்றார்.
கடந்தாண்டு எலான் மஸ்க் தனது டெஸ்லா பங்குகளின் பெரும்பகுதியை விற்றார், முதலில், ட்விட்டரை வாங்கவும், பின்னர் டுவிட்டர் நிறுவனத்தை சமாளிக்கவும் செலவு செய்தார். கடந்தாண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மாதத்தில் 15.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றார். அப்போது 'இதற்கு மேலும் பங்குகளை விற்க திட்டமிடவில்லை' என்று அவர் கூறினார்.
இருப்பினும், கடந்த நவம்பர் மாதம் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மற்றொரு 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றார். டெஸ்லா பங்குகள் 2022 இல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதே ஆண்டில் மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை அடைந்தன. இத்தகைய மந்த நிலை காலங்களில், மஸ்க் அனைத்து டெஸ்லா ஊழியர்களுக்கும் 'பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வு' பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
Twitter போல் Facebook, Instagram தளத்திலும் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம்?
மஸ்க்கின் ட்விட்டர் கையகப்படுத்தல்
பிறகு அக்டோபர் மாதத்தில் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு மஸ்க் வாங்கினார். டுவிட்டரில் தனது புதிய பொறுப்பை ஏற்ற பிறகு நிறுவனத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றில் முதல் காரியங்களில் ஒன்று, டுவிட்டரில் அப்போதைய சிஇஓ அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நீக்கினார்.
மேலும், எலான் மஸ்க் வந்தபிறகு பெரும்பாலான ட்விட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர், பலர் பணிநீக்கம் செய்யப்பட்டள்ளனர். நவம்பர் 2022 க்குப் பிறகு நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படாது என்று உறுதியளித்தார். இருப்பினும், அதன்பிறகும், பல பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன. மஸ்க் கையகப்படுத்துவதற்கு முன்பு, ட்விட்டரில் சுமார் 7,500 ஊழியர்கள் இருந்தனர். அவர் வந்த பிறகு, பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக குறைக்கப்பட்டது.