
மறக்க முடியாத நிகழ்வுகள்
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் சிறப்பாகவே தொடங்கியது. இருந்த போதும் பல்வேறு மறக்க முடியாத நினைவுகளோடும், பல சம்பவங்களை மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. அதில் முக்கியமான சம்பவங்கள் இனியும் நடக்கக்கூடாது என மக்கள் வேண்டிக்கொள்வார்கள். அந்த வகையில் இயற்கை சீற்றங்களையும், விஷச்சாராய மரணமும். கொலை சம்பவங்களும் மக்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி இந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்
ஆம்ஸ்ட்ராங் கொலை
தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் ஆம்ஸ்ட்ராங், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 25க்கும் மேற்பட்ட குறவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருந்தது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருவெங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தொடரும் என்கவுண்டனர்
தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசு எதிர்கொண்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளுக்கே சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அந்த வகையில் பல நாட்களாக போலீசார் தேடி வந்த ரவுடிக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் முதலில் அரிவாளால் வெட்ட தொடங்கிய முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். அடுத்தாக கொலை, கொள்ளை என 59 வழக்குகளில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜியையும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சுட்டுப்பிடித்த போலீசார்
மற்றொரு என்கவுண்டர் தான் சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடி வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்ட போது தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவிற்கும் எந்த தொடர்பும் இல்லையென போலீசார் வழக்கை முடித்தனர்.
காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம்
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தன்சிங் காணமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கடந்த மே மாதம் புகார் தெரிவித்தனர். மேலும் அவர் எழுதிய கடிதமும் சிக்கியது. இதனையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் மர்மமான முறையில் எரிந்து நிலையில் சடலமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
எனவே ஜெயக்குமாரை யாராவது கடத்தி சென்று கொலை செய்தனரா.? அல்லது தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை. முதலில் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் அவரது உடலில் கல் கட்டப்பட்டு இருந்ததும், வாயில் பிரஸ் இருந்ததும் மர்மத்தை அதிகரித்தது. ஆனால் இறுதிவரை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான முடிச்சை போலீசாரால் அவிழ்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை அருகே மிகப்பெரிய ரயில் விபத்து
இந்தியாவில் பல மாநிலங்களில் அவ்வப்போது ரயில் விபத்துகள் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அதிலும் சென்னைக்கு அருகே நடைபெற்ற விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில்
19 பயணிகள் காயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
விபத்தா.? சதியா.?
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விபத்திற்கான காரணம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணம் எனவும் மனிதத் தவறுகளால் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. கடைசியாக என்ஐஏ போலீசாரின் தீவிர விசாரணை மேற்கொண்டர். அதில் ரயில் பாதையில் லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவற்றை கழற்றியிருப்பது தெரியவந்தது. எனவே யாரோ திட்டமிட்டு ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சதி வேலையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.