
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது புதியதாக கட்டி வரும் அவரது வீட்டின் அருகே கொடூரமாக முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், ராம், செல்வராஜ், சதீஷ், நரேஷ், சீனிவாசன் என மொத்தம் 11 பேர் அடுத்தடுத்து காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்ததாக கூறினார். ஆனால் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என திட்டவட்டமாக கூறிவந்தனர். இதனிடையே சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு அருண் நியமிக்கப்பட்டார். இதனால், விசாரணை சூடுப்பிடித்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனால் பயந்து போன மற்ற கைதிகள் கொலைக்கான காரணத்தை கூற தொடங்கினர். இதில் சென்னை ஜாம் பஜாரை சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலையையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் திமுக, அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் முக்கிய நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
அடுத்ததாக இந்த கொலையை செயல்படுத்த திட்டம் போட்டது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வத்தாமன், அவரது தந்தை பிரபல தாதாவும், வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தே நாகேந்திரன் திட்டம் போட்டு கொடுத்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தான் நாகேந்திரன் ரவுடி சம்போ செந்தில் மூலம் கொலையை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது தெரியவந்தது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணை எந்த கட்டத்தில் இருக்கிறது என்று கூறாமல் காவல்துறை மவுனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் எந்த கட்டத்தில் உள்ளது என்பது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீதம் வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதுவரை 3 முக்கிய ரவுடிகள் இதுவரை பிடிபடவில்லை.
சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைதாவார்கள். கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம். முக்கிய நபர்கள் குறித்து காவல்துறை விரைவில் தெரிவிக்கும். வழக்கில் கைதானவர்கள் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறையில் உதவி ஆணையர் தலைமையில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப் பொருள் உளவு ஆகிய புதிய சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.