Kutralam falls today status : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆரம்பமே இப்படி இருந்தால் ஏப்ரல், மே, ஜூன் மாத வெயிலை நினைத்தால் அலறி துடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வெயிலின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க குளுமையான இடங்களை தேடி ஓட மக்கள் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்ல தொடங்கியுள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானலில் அலைமோதும் கூட்டம்
அங்கு இயற்கையான அழகிய மரங்களை ரசித்தும், வாகன இரைச்சலில் இருந்து தப்பித்தும், தலையை தொட்டு செல்லும் மேக கூட்டங்களின் அழகில் மயங்கவும் செய்கின்றனர். அதே நேரம் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஈ பாஸ் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒரு நாளைக்கு 6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால் சுற்றுலா வந்த பயணிகள் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
மேலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட மக்கள் அடுத்து செல்ல விரும்புவது நீர் நிலைகள் சார்ந்த இடங்கள், இதில் முதல் இடத்தில் இருப்பது தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், இந்த மாவட்டத்தை சுற்று பல்வேறு அழகிய இடங்கள் உள்ளது.
Courtallam
குற்றால அருவிகளில் நிலை என்ன.?
குற்றாலம், மாஞ்சோலை, பாபநாசம், காரையாறு என இயற்கை அழகு கொண்ட இடங்கள் உள்ளது. அந்த வகையில் குற்றாலம் செல்ல மக்கள் திட்டமிடுவார்கள். ஆனால் வெயிலின் தாக்கத்தின் காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறதா என தெரியாமல் குற்றாலம் சென்று சுற்றுலா பயணிகள் திரும்பி வரும் நிலையும் அவ்வப்போது ஏற்படும்.
இந்த நிலையில் குற்றாலத்தில் தற்போது அருவியில் தண்ணீர் கொடுகிறதா என்ற தகவலை பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. அதன் படி தென்காசி மாவட்டத்திலும் மழையானது இரவு நேரத்தில் பெய்து வருகிறது.
கோடை மழை- மிதமாக கொட்டும் அருவி
இதனால் எப்போதும் ஏப்ரல் மாதத்தில் வறண்டு காணப்படும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, 5 அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் போன்ற இடங்களில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. சீசன் நேரத்தில் உள்ளது போல் அதிகளவு தண்ணீர் இல்லாமல் குறைவான அளவே தண்ணீர் கொட்டுகிறது. அடுத்து வரும் 4 நாட்கள் இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அருவிகளில் தண்ணீர் வர வாய்ப்பு இருப்பதாக தென்காசி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.