
தமிழக அரசியலையே புரட்டிப்போடும் வகையில் மாபெரும் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தவெக அமைச்சரவைக்கு காங்கிரஸ் ஏற்கெனவே துண்டு போட்டு இடம் பிடித்து இருந்ததால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபுக்கு இடமில்லை
இதேபோல் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்ட பல தவெக எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்த்தபடி அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை தோற்கடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இது பொதுமக்கள் மட்டுமின்றி தவெகவினருக்குமே ஆச்சரியம் மட்டுமின்றி அதிர்ச்சியையும் அளித்தது.
ஏனெனில் சக்திவாய்ந்த அரசியல் தலைவரான மு.க.ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியிலேயே 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்திருந்தார் வி.எஸ்.பாபு. உடன்பிறப்புகளுக்கு திமுக ஆட்சியை இழந்ததை விட அதிக மன வலியை கொடுத்தது ஸ்டாலினின் தோல்விதான். இப்படியாக மாபெரும் தலைவரை வீழ்த்தி ''யார்ரா இந்த பாபு'' என இந்தியாவே தன்னை நோக்கி பேச வைத்த வி.எஸ்.பாபுக்கு அமைச்சரவையில் இடமில்லாததற்கு தவெகவினர் சிலரே சமூகவலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வி.எஸ்.பாபுவை விஜய் கைவிட்டது ஏன்?
தவெக தலைவரும், முதல்வருமான விஜய், வி.எஸ்.பாபுவை அமைச்சரவையில் சேர்க்காததற்கு பல்வேறு பின்னணி காரணங்கள் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சென்னையில் ஏற்கனவே முதல்வர் விஜய் உட்பட 7 பேர் அமைச்சர்களாகிவிட்டதால், மேலும் ஒருவருக்கு அதே மாவட்டத்தில் இருந்து வாய்ப்பு தருவது மற்ற மாவட்ட நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் என தலைமை கருதி வி.எஸ்.பாபுவை ஒதுக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கெனவே தென்காசி, திருநெல்வேலி உள்பட 19 மாவட்டங்களில் தவெக அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை என விமர்சனங்கள் பொங்கியெழுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வி.எஸ்.பாபு போன்ற ஒரு வலிமையான தலைவரை அமைச்சரவைக்குள் முடக்குவதை விட, அவருக்குக் கட்சியின் மாநில அளவிலான மிக முக்கியப் பொறுப்பையோ அல்லது அரசு வாரியத் தலைவர் பதவியையோ வழங்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளில் பயன்படுத்த விஜய் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
மரிய வில்சனுக்கு முன்னுரிமை
இதுமட்டுமின்றி வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவை இடத்துக்கான வாய்ப்பு இருந்த நிலையில், அதனை மரிய வில்சன் தட்டித்தூக்கி விட்டதாக வி.எஸ்.பாபு ஆதரவாளர்கள் சிலர் பொங்கி வருகின்றனர். சீனியாரிட்டி மற்றும் தேர்தல் வெற்றியை தாண்டி தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மரிய வில்சன் அமைச்சர் பொறுப்பை பெற்று விட்டதாகவும், சில சமூகக் கணக்குகளின் அடிப்படையிலேயே மரிய வில்சனுக்கு விஜய் முன்னுரிமை கொடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்றதை விஜய்யே விரும்பவில்லை என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஸ்டாலினை வீழ்த்திய காரணத்துக்காக மட்டுமே அமைச்சர் பதவி வழங்கினால் அவரை பழிவாங்குவது போல் இருக்கும் என்று கருதி விஜய் இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ வி.எஸ்.பாபுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததற்கு கட்சிக்குள்ளேயே லேசாக பூகம்பம் வெடித்துள்ளது.
''அரசியலில் வி.எஸ்.பாபு நேற்று முளைத்த காளான் அல்ல; அவர் ஆலமரம் போன்று நீண்டகாலம் அரசியலில் இருந்து வருகிறார். விஜய் முகத்தை பார்த்து மட்டும் அவருக்கு ஓட்டு விழவில்லை. 2011ம் ஆண்டு திமுகவில் இருந்தபோது கொளத்தூர் தொகுதியில் களப்பணியாற்றியுள்ளார். பின்பு அதிமுக சென்றபோதும் கொளத்தூர் தொகுதி மக்களுக்காக ஓடோடி உதவிகள் செய்து அவர்களின் மனதில் இடம்பிடித்தவர். இதனால் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது எந்த வகையில் நியாயம்'' என அவரது ஆதரவாளர்கள் மனக்குமுறலை கொட்டத் தொடங்கியுள்ளனர்.
இவர்களை சமாதானப்படுத்தி வரும் மற்றொரு தரப்பினர்''தளபதி எது செய்தாலும் அது காரணமில்லாமல் இருக்காது. வி.எஸ்.பாபுக்கு உரிய மரியாதையை அவர் கொடுப்பார்'' என்று கூறி வருகின்றனர். பொதுவாக எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் அமைச்சரவையில் இடம் இல்லாமல் இருப்பவர்கள் போர்க்கொடி தூக்குவதும், அதிருப்தியை வெளிப்படுத்துவதும் இயல்பு தான். இதற்கு தவெகவும் விதிவிலக்கு அல்ல. ஆகையால் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடிப்பதற்குள் வி.எஸ். பாபுவை தவெக தலைமை எவ்வாறு சமாதானப்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.