கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் சிபிஐ அதிகாரிகள் முன்பு விளக்கம் அளிப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். விஜய்யைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
24
பரஸ்பரம் குற்றச்சாட்டு
கட்சியின் தலைவர் விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே மொத்த அசம்பாவிதத்திற்கும் காரணமென திமுக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் வெறும் 10000 நபர்கள் மட்டும் நிற்கும் வசதி கொண்ட வேலுச்சாமி புரத்தில் 30000 நபர்கள் அனுமதிக்கப்பட்டதே அசம்பாவிதத்திற்கு காரணம். மேலும் கட்சி சார்பில் கேட்கப்பட்ட விரிவான இடத்திற்கு பதிலாக ஆட்சியாளர்கள் மிகவும் குறுகலான இடத்திற்கு அனுமதி அளித்ததே இச்சம்பவத்திற்கு காரணமென கட்சி சார்பில் தமிழக அரசு மீதும் குற்றம் சாட்டப்படுகிறது.
34
இன்று ஆஜராகும் விஜய்
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் விஜய் இன்று நேரில் ஆஜராவதற்காக விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடம் தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விஜய்யின் பிரசார வாகனம் சுமார் 8 மணி நேரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விஜய்யிடம் இன்று ஒரே நாளில் விசாரணை நிறுத்துக் கொள்ளப்படுமா? நாளையும் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் விஜய்க்கு மத்திய அரசு சார்பில் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவரது தனிப்பாதுகாவலர்கள், மத்திய அரசு பாதுகாவலர்கள் விஜய்க்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் விஜய்யை சந்திப்பதற்காக டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பாக கூட்டம் கூட வாய்ப்பு இருப்பதால் அங்கும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.