திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியது சலசலப்பை உருவாக்கி உள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். பண்ருட்டி தொகுதியில் உதயசூரின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தமிழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவராக நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு சார்பில் கட்டமைக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
24
தொடரும் கூட்டணி கணக்கு
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடும் முனைப்பில் இருக்கும் வேல்முருகன் அண்மையில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியது சலசலப்பை உருவாக்கி உள்ளது.
34
எடப்பாடியுடன் ஒன்றரைமணி நேர உரையாடல்
விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கொண்ட உரையாடல் குறித்து பேசுகையில், “இன்று எடப்பாடி அண்ணனோட ஒன்றரை மணி நேரம் பல விசயங்கள் குறித்து விவாதித்துக் கொண்டு வந்தேன். இரண்டுமுறை அவருடன் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் கூட அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருவரும் சட்டமன்றத்திற்கு வரும்பொழுது வணக்கம் வைத்துக் கொள்வோம், அத்துடன் கடந்து சென்றுவிடுவோம். ஆனால் இன்று அருகாமையில் அமரும் வகையில் இருக்கை இருந்தது. என்னிடம் அவர் கூறுகையில், ‘தமிழகத்திற்காக நான் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தேன், 70 கலை அறிவியல் கல்லூரிகளை நான் திறந்தேன், வேளாண் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எப்படியாவது அவர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். காரணம் நான் ஒரு விவசாயி, ஒரு கிராமத்தான்’ என வெள்ளந்தியாக பேசினார். உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். பின்னர் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்” என்று தனது உரையாடல் குறித்து விளக்கம் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமி உடனான உரையாடல் குறித்து பொதுவெளியில் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.