Published : Sep 25, 2024, 08:26 AM ISTUpdated : Sep 25, 2024, 08:32 AM IST
Ulundurpet Van Accident: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்துள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களது வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
34
Police investigation
மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.