TVK MLA-க்களுக்கு ரூ.15 கோடி பேரம்: அதிமுக, திமுக மீது தவெக எம்.எல்.ஏ வைத்த குதிரை பேர குற்றச்சாட்டால் பரபரப்பு

Published : Nov 04, 2026, 06:03 PM IST

TVK MLA Musthafa : மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா, தங்களை விலைக்கு வாங்க அதிமுக மற்றும் திமுகவினர் ரூ.15 கோடி பேரம் பேசுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

PREV
13
TVK MLA Musthafa about Horse Trading

தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடப்பதாக மதுரை சென்ட்ரல் தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா செவ்வாய்க்கிழமை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கு ஆதரவு தர அதிமுகவினர் தன்னைத் தொடர்புகொண்டு ரூ.15 கோடி பேரம் பேசியதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, பொறுப்பேற்ற முதல் 6 மாதங்களிலேயே மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கான சிறப்புத் திட்டம் இன்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து அரசியல் எதிரிகளை விமர்சித்த முஸ்தபா, அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமாரின் சமீபத்திய பேச்சுகளை வெறும் அரசியல் நாடகம் என சாடினார். "ஆர்.பி. உதயகுமார் எப்போதுமே இப்படித்தான் நாடகத்தனமாக பேசுவார். பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. இப்போது தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படி அடிப்படை ஆதாரமில்லாமல் பேசி வருகிறார்" என்று அவர் கூறினார்.

23
சீமானை சாடிய முஸ்தபா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்த அவர், "சீமான் எப்போதுமே இரட்டை வேடம் போடுபவர். பொது வேட்பாளராக நிற்கத் தயார் எனச் சொல்லும் அவர், இதுவரை ஒரு எம்.எல்.ஏ சீட் கூட ஜெயிக்கவில்லை; டெபாசிட் கூட வாங்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால்தான், தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்கள்" என்றார்.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முஸ்தபா தெரிவித்தார். "முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பெண்களுக்காக தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அதே வழியில், தற்போதைய முதலமைச்சரும் தாயுமானவர் திட்டம், தங்க மோதிரம் வழங்கும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார். மக்கள் இதை மனதார வரவேற்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

"அம்மா கொண்டு வந்த பல நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஆனால், மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அதே பெயர்களிலும், அதே நோக்கத்தோடும் தற்போதைய அரசு அந்தத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. இப்படி நல்லபடியாக நடக்கும் இந்த ஆட்சியை கவிழ்க்க சில சக்திகள் சதி செய்கின்றன" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

33
குதிரை பேர குற்றச்சாட்டு

குதிரை பேரம் குறித்து விரிவாகப் பேசிய முஸ்தபா, "தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க மீண்டும் குதிரை பேரம் நடக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது ஆதரவு தரக் கோரி, எனக்கு போன் செய்து ரூ.15 கோடி பேரம் பேசினார்கள். இதுபற்றி நான் கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அதிமுகவினர் இந்த விவகாரத்தில் ரொம்பவே தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் என்னைத் தொடர்புகொண்டு எம்.எல்.ஏ-க்களை இழுக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் சரி, தவெக எம்.எல்.ஏ-க்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள்.

கட்சியில் எந்த விரிசலும் இல்லை என்பதை ஆணித்தரமாகச் சொன்ன அவர், "இந்த குதிரை பேரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்குமே தொடர்பு இருக்கிறது. இதை நான் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்" என்றார்.

"முன்பு திமுக 35 கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாருமே முன்வரவில்லை. ஆனால், எந்தவொரு பெரிய கூட்டணியையும் நம்பாமல், மக்களை மட்டுமே நம்பி களமிறங்கிய தவெக, 34 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்து சரித்திரம் படைத்துள்ளது. மக்கள் ஆதரவும் எழுச்சியும் தவெக பக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இது எங்களுக்கு இன்னும் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுத் தரும்" என்று முஸ்தபா தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories