நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அதன் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடத்தினார். இதையடுத்து அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் மாநாடு தொடங்க உள்ளது.
24
குவியும் தொண்டர்கள்
தவெக மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று இரவில் இருந்தே தவெக தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள். இதனால் தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு குவியும் மக்கள் கூட்டத்தை போல் தவெக மாநாட்டிற்கும் தொண்டர்கள் கடல்போல் திரண்டு வந்துள்ளதால் மதுரையே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாவிட்டாலும் தொண்டர்கள் 5 கிலோமீட்டர் வரை நடந்து வருகின்றனர். இதனால் காலையிலேயே மாநாட்டு திடல் ஹவுஸ்ஃபுல் ஆகி இருக்கிறது.
34
கொளுத்தும் வெயில்
மாலையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காலையிலேயே தொண்டர்கள் குவிந்துள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், பவுண்சர்களும் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். இன்று மதுரையில் வெயில் கொளுத்தி வருவதால், அங்கு குவிந்த தொண்டர்கள் நிழலை தேடி ஓடும் சூழலும் உருவாகி உள்ளது. சிலரோ தலையில் சேரை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இனிப்போகப் போக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். அங்கு உணவுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறதாம்.
தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களுக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் பாட்டில்களும் வழங்கப்படவில்லையாம். மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் வரை தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படாது என அங்கிருக்கும் பவுன்சர்கள் கூறி இருக்கிறார்கள். அதேபோல் அங்கு தற்காலிகமாக கடைகள் அமைத்து தரமற்ற உணவுகள் பரிமாறப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்காக தவெக சார்பில் உணவு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.