கரூரில் சனிக்கிழமை மாலை நடந்த விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூடியிருந்த பெருங்கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், நெரிசல் ஏற்பட்டு 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலர் மயக்கமடைந்ததாகவும், அவர்களில் சிலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், சேலம், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆண்கள் என்றும், 16 பெண்கள் என்றும், 6 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கரூரில் நிலைமை மோசமாக உள்ளதால், சென்னை தலைமைச் செயலகத்தில் அவரச ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவே கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தனி விமானத்தில் கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க உள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற உள்ளார். அதேபோல் துபாய் செல்ல இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக கரூர் விரைகிறார்.
ஏற்கனவே கரூரில் அமைச்சர்கள் மா சுப்ரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முகாமிட்டுள்ள நிலையில், முதல்வரின் உடனடி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ள நிலையில், அதுபற்றியும் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.