தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பரப்புரை மேற்கொண்டார். சரியாக மாலை 6 மணிக்கு கரூர் வந்த விஜய், பரப்புரை செய்ய இருந்த வேலுச்சாமி புரத்தில் 7 மணிக்கு பேசத் தொடங்கினார். விஜய் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் சிலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து அனைவருக்கும் வினியோகம் செய்தார். பின்னர் போகப் போக கூட்டம் அதிகமானதால் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் விஜய்.
விஜய் பரப்புரை முடிந்த பின்னர் தான் அங்கு ஏராளமானோர் மயக்கமடைந்து கிடந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் ஏராளமான குழந்தைகளும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் மயங்கி கிடந்தவர்களை மீட்க வரிசையாக ஆம்புலன்ஸ்கள் தவெக பரப்புரை நடந்த இடத்திற்கு வந்தன. அங்கு இருந்து அவர்களை மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனிக்கு செல்லப்பட்டனர். சிலர் செல்லும் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விஜய் மீது என்ன நடவடிக்கை?
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாகவும், 58 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் உடனடியாக அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாக கூறிய அவர், நாளை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கரூர் வந்து பார்வையிட உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். தற்போதைக்கு சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்றுவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். மற்றவையெல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம். இங்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் எல்லாரும் இருக்கிறார்கள். அதனால் நடவடிக்கை எடுக்கபதற்கான வேலைகளும் கண்டிப்பாக நடந்துகொண்டு தான் இருக்கிறது என செந்தில் பாலாஜி கூறினார்.