
தமிழக சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய் அரசியல் வருகை. இவர் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு.36(2)ன் கீழ் வேட்பு மனு பரீசிலனையின போது தான் எழுப்பிய வாய்மொழி ஆட்சேபணைகளின் தொடர்ச்சியாக எழுத்துப்பூர்வமான ஆட்சேபணைகளை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுப் படிவங்களில் தகவல்களை வெளியிடாமலும், மறைத்தும் உள்ளதை எனது ஆட்சேபனைகள் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 33 A மற்றும் B-இன் படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும். ஆனால், வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா, முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதனை உங்கள் கவனத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஆதவ் அர்ஜுனாவின் மனைவியான டெய்சி ஆதவ் அர்ஜுனா தற்போது இயக்குநராகப் பணியாற்றி, நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் ஆகும். இயக்குநர் டெய்சி ஆதவ் அர்ஜுனா வைத்திருக்கும் பங்குகள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் ஆகும். ஆனால் அவை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவத்தின் 26-ஆம் படிவத்தில் வெளிப்படுத்தியிருப்பது, முக்கியத் தகவல்களை மறைத்தல் மற்றும் வேண்டுமென்றே வெளியிடாமல் இருத்தல் ஆகும். எனவே, தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்.
மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் டுவெல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன், உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பட்டியலை அளித்துள்ளார். மேலும், மேற்கூறிய நிறுவனங்களின் பல சொத்துக்கள், PMLA சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனச் சொத்துக்களும், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதிகளும் அமலாக்கத்துறையின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய உண்மைகள் அனைத்தையும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவங்களில் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்படத் தகுதியானது என சுயேட்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும் வரை காத்திருக்குமாறு தேர்தல் அதிகாரி ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். பின்னர், மீண்டும் நடைபெற்ற பரிசீலனையில், வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதாக தேர்தல் அதிகாரி கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.