பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், ஓம் நமச்சிவாயா என்ற உச்சரித்த படியே பக்தியுடன் கிரிவலம் வரும் பக்தர்களிடம் குறிப்பிட்ட சில பகுதிகளில் திருநங்ககைள் குழுக்களாக நின்று இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அப்படி காசு கொடுக்காமல் செல்லும் பக்தர்களை திருநங்கைகள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், பணம் கொடுக்கவில்லையென்றால் தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களை குறி வைத்தே திருநங்கைகள் இதுபோன்று செய்து வந்தனர். அதேபோல் அண்ணாமலையார் கோவில் வீட்டு வாசலில் இதுபோன்று சம்பவம் நடைபெறுகிறது.
இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்வதாக கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்: திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளுக்கு அறிவுரைக்கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும். அதே போன்று குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாசகம் பெறும் முதியோர்கள் மற்றும் உடல்நலன் பாதிக்கபட்டவர்களை விசாரித்து காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: TamilNadu Weatherman: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!
பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மூலமாக கண்காணித்து தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைகள் சேர விடாமல் உடனடியாக அகற்ற வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பக்தர்கள் கோயிலினுள் முறையான வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். கிரிவலப்பாதை மற்றும் கோயில் உட்புரத்தில் மருத்துவ முகாம் அமைத்திடவும் தேவையான இடங்களில் 108 அவசரகால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறை சார்பாக போதிய அளவிலான காவலர்களை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.