வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி, பக்தர்கள் கடலில் குளிக்க 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24
புனித ஆரோக்கிய மாதா விழா
இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க பத்து நாட்கள் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேளாங்கண்ணி கடற்கரை அழகை ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
34
கடலில் குளிக்க தடை
குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடலில் தடையை மீறி யாரேணும் குளிக்க முற்பட்டால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாளை நாகை, கீழ்வேளூர் வட்டார பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.