Published : Dec 07, 2024, 07:18 PM ISTUpdated : Dec 07, 2024, 09:10 PM IST
Tiruvannamalai Deepam Festival: திருவண்ணாமலையில் டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
25
Deepam Festivel
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவு வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். டிசம்பர் 9ம் தேதி, அண்ணாமலையார், உண்ணாமலையம்மனின் வெள்ளித்தேரும், 10ம் தேதி தேரோட்டம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபம் 6 மணிக்கும் ஏற்றப்படுகிறது.
அன்றைய தினம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திருவிழாவின் 4வது நாளே திருவண்ணாமலை நகர் முழுவதுமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
45
Deepam
இந்நிலையில் கார்த்திகை தீப பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் தங்க உள்ளதால் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 08ம் முதல் 16ம் தேதி வரை 156 அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.