திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.6 கோடியே 21 லட்சம் ரொக்கம், 245 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 264 கிராம் வெள்ளி ஆகியவை பெறப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் தற்போது தினமும் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் இக்கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
24
உண்டியல் காணிக்கை
இந்நிலையில் கஷ்டம் என்று வந்து மனம் உருகி அண்ணாமலையாரை தரிசித்து விட்டு சென்று நினைத்த காரியம் நடந்தால் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த காணிக்கைகள் மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
34
சிசிடிவி கேமிரா மூலம் பதிவு
இதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து எண்ணும் பணி சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த முறை முதல் முறையாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்த நிலையில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை எத்தனை கோடி என்பதை பார்ப்போம். கோயில் உண்டியலில் ரூ.6 கோடியே, 21 லட்சத்து, 74 ஆயிரத்து, 473 ரூபாய் ரொக்கம், 245 கிராம் தங்கம், 2 கிலோ 264 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகையானது அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம் மாதம் உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.