குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11 ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகின்றன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.