TN ALERT : மழையால் பள்ளிகளுக்கு லீவா? ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள புதிய ஆப் வெளியிட்ட தமிழக அரசு!!

First Published | Sep 30, 2024, 1:53 PM IST

தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வானிலை முன்னெச்சரிக்கை, மழை அளவு, நீர்த்தேக்க நிலவரம் உள்ளிட்ட தகவல்களை வழங்கும். 

மழை, வெள்ள முன்னெச்சரிக்கை

மழை, வெயில், புயல், அனல் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளை தினந்தோறும் வானிலை மையம் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் மீனவர்கள் கடலில் காற்று அதிகமாக உள்ள நேரத்தில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க முடியும், எந்த மாவட்டத்தில், எந்த இடத்தில் எப்போது மழை வரும் என்பதையும் முன்கூட்டியே நவீன தொழில்நுட்பம் மூலம் கணிக்க முடிகிறது. இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல உதவிடுகிறது.

இருந்த போதும் ஒரு சில நேரங்களில் வானிலை மையத்தாலும் கண்டறியமுடியாத வகையில் இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்களின் உயிரை கொண்டு சென்றுவிடுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் இது போன்ற சம்பவங்களை தடுக்க மக்களுக்கு அலர்ட் செய்யும் வகையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 

மழை முன்னெச்சரிக்கை -முதலமைச்சர்ஆலோசனை

தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கும் மழை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த நிலையில் மழையின் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது.

முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது.  சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது என கூறினார். மேலும் இன்னும் சொல்லப்போனால், சில மணி நேரங்களிலேயே பருவகாலத்திற்கான, மொத்த மழையும் கொட்டி தீர்த்து விடுகிறது. இதனை எதிர்கொள்வது தான் மிக மிக முக்கியமானதாகவும் சவாலாகவும் இருக்கிறது. இந்த பாதிப்பால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். 

Tap to resize

School Leave

வானிலை தகவல்- மாநில அவசரகால செயல்பாட்டு மையம்

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் மக்கள் பாதிப்பில் சிக்கினர். எனவே  இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

 சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும் என தெரிவித்தார். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால்,  அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க  தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

புதிய செயலி அறிமுகம்

பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் சரியாகச் செய்ய முடியும். அதற்காக, நாம் தற்போது 1400 தானியங்கி மழைமானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும் என்பதால்தான் ஒரு முக்கியமான செயலியை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN-Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.  

மீனவர்களின் பாதுகாப்பு

மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவகள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் மழை காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்கிட வேண்டும்.

நாட்டிற்கு முன்னுதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக மிக அவசியமானது என தெரிவித்தார்.  

floods

வெள்ள பாதிப்பு - அலர்ட் செய்ய செயலி

வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன் கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம். இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!