ரயில்களில் இனி கூட்ட நெரிசல் இருக்காது.! தீபாவளி, பூஜை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்

First Published | Sep 30, 2024, 8:09 AM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து, வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள்

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பு முடித்து வேலை தேடி அலைகின்றனர். சொந்த ஊரில் சரியான வேலை கிடைக்காத காரணத்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு விட்டு  வெளியூருக்கு பயணம் செய்கின்றனர். அங்கு கிடைத்த வேலையை செய்தும், சிறிய இடத்தில் தங்கியும், புதிய வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

வந்தோரை வாழவைக்கும் சென்னை என பெயருக்கு ஏற்ப எத்தனை லட்சம் பேர் சென்னையை நோக்கி வந்தாலும் இருக்க அடைக்களம் கொடுப்பது மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு வேலையை கொடுத்து காப்பாற்றி வருகிறது. எனவே சொந்த ஊரை விட்டு வந்த மக்கள் பொங்கல், தீபாவளி, பூஜை விடுமுறை, ரம்ஜான், கிறிஸ்துமஸ் மற்றும தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு கொண்டாட ஊருக்கு பயணம் செய்வார்கள்.

விஷேச நாட்களில் கூட்ட நெரிசல்

இதனால் ஒரே நாளில் அதிகம் பேர் பயணம் செய்வதால் பேருந்து, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மேலும் தனியார் பேருந்துகளில் கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை தினத்தின் போது மட்டும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இதனால் தமிழகத்தின் தலைநகரான சென்னை வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ரயில்வே துறை சார்பாக தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழக அரசு சார்பாகவும் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. 
 

Tap to resize

34 சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்தநிலையில் சிறப்பு ரயில் இயக்கம் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூஜை விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி 302 பயணங்களோடு 34 சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் மாதத்தில் வரவிருக்கும் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு முக்கிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதன் மூலம் பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்க தெற்கு ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கூட்ட நெரிசிலை குறைக்க அதிரடி திட்டம்

இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா முழுவதும் உள்ள பயணிகளுக்கு பயனளிக்கும். அந்த வகையில் பயணிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு ஏற்ப வசதியான மற்றும் சுமூகமான பயணங்களை உறுதி செய்யும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மேலும் தெற்கு பகுதிகளுக்கு மட்டுமில்லாமல் வடக்கு நோக்கி செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மொத்தம் 302 பயணங்களுடன் 34 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள்

திட்டமிடப்பட்டுள்ள 34 சிறப்பு ரயில்களில், 268 பயணங்கள்  28 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த சேவைகளுக்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சாத் போன்ற பண்டிகைகளின் போது பயணிகளின் தேவை அதிகரிப்பதை பூர்த்தி  செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2023 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில் 130 பயணங்களுடன் 49 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியது, இது பண்டிகைக் காலத்திற்கான ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு வசதியாக இருந்தது.

இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, பயணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பண்டிகை மாதங்களில் கடைசி நேர நெரிசல் மற்றும் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சிறப்பு ரயில்கள் தொடர்பாக அட்டவணைகள், வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவை அதிகாரப்பூர்வ தெற்கு ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி மூலம் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே நாடுமுழுவதும் வரும்பண்டிகை காலத்தில் 6,000-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்களைஇயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!