மரங்களை அழித்து வீடுகள்
நவீன காலத்திற்கு ஏற்ப மக்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வேலையை தேடி சொந்த கிராமத்தை விட்டு பல நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இதனால் மக்கள் தொகையானது குறிப்பிட்ட நகரங்களில் அதிகரித்து வருகிறது. எனவே இயற்கையை அழித்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. காடுகளை அழித்தும், நீர் வழித்தடங்களை மறைத்தும்,
கால்வாய்களை ஆக்கிரமித்தும், வயல்வெளிகளை பிளாட் போட்டு விற்றும் வீடுகள் முளைத்து வருகிறது. இதனால் மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தூய்மையான காற்றே இல்லாத நிலை உருவாகியுள்ளது. மாசு அடைந்த காற்றை தான் தினந்தோறும் மக்கள் சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மதுரையில் மூலிகை தோட்டம்
மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வரிச்சூர் என்ற பகுதியில் 40 சென்ட் கொண்ட இடத்தில் இந்த மூலிகை தோட்டத்தை உருவாக்கியுள்ளார். பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார். இந்த மூலிகை தோட்டத்தில் கருநெச்சி, பூனை மீசை, கருமஞ்சள், பேய்கரும்பு, கருடகல் சஞ்சீவி, போன்ற அரிய வகை இனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார். இவரது மூலிகை தொட்டத்தை பார்க்க பல இடங்களிலும் இருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் பாராட்டு
இந்தநிலையில் தான் பிரதமர் மோடி சுபஶ்ரீயின் இந்த முயற்சிக்கு பாரட்டியுள்ளார். பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்கள் மத்தியில் ரேடியோவில் பேசி வருகிறார். அப்படி பேசும் போதும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொடர்பாகவும், அவர்களின் சாதனை தொடர்பாகவும் எடுத்துரைத்து பாராட்டுவார்.
அந்த வகையில் நேற்றைய தினம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீயை பாராட்டியுள்ளார். அதில், தனது முயற்சியின் துணையால் கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை சுபஸ்ரீ உருவாக்கி இருக்கிறார் . இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர், இவர் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், மருத்துவ தாவரங்களின் மீது இவருக்கு அலாதியான பிரியம் உள்ளது.
பாம்புக்கடிக்கு மூலிகை மருந்து
இவருடைய இந்த ஈடுபாடு 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து தொடங்கியுள்ளது. ஒரு முறை தனது தந்தையை நச்சுப் பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. இதனையடுத்து பாரம்பரியமான மூலிகைகள் தாவரங்களைக் கொண்டு அவரது தந்தையையின் உயிர் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பாரம்பரியமான மருத்துவ தாவரங்களை பற்றி தனது தேடல் பணியை சுபஶ்ரீ தொடங்கியுள்ளார்.
இன்று மதுரையின் வரிச்சூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய மூலிகை பூங்காவில் 500க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் உள்ளது. இந்த மூலிகை பூங்காவை உருவாக்க இவர் தீவிரமாக உழைத்துள்ளார். ஒவ்வொரு மூலிகை தாவரத்தையும் தேடி தேடி இவர் தொலைதூரங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறார். பல்வேறு மூலிகை மருந்து தொடர்பான தகவலை சேகரித்து உள்ளார். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மூலிகை மருந்தை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.
கலாச்சாரத்தின் அங்கம்
இன்று இவருடைய மூலிகை பூங்காவை பார்ப்பதற்காகவே பல மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்தும் பலரும் வருகிறார்கள். நமது கலாச்சாரத்தை அங்கமாக விளங்கும் பாராம்பரியத்தை முன்னெடுத்து சுபஶ்ரீ சென்று கொண்டிருக்கிறார். அவருடைய மூலிகை பூங்காவானது நமது கடந்த காலத்தை வருங்காலத்தோடு இணைக்கிறது அவருக்கு நம்முடைய நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுபஶ்ரீயின் இந்த முயற்சி உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல இடங்களில் இருந்தும் பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சுபஶ்ரீ கூறுகையில், தனது கணவர் இந்த மூலிகை தொட்டத்தை கவனித்து வருவதாகவும், பள்ளி வேலை முடிந்ததும் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் தானும் பராமரித்து வருவதாக தெரிவித்துளார். தனது தந்தையை 1981ஆம் ஆண்டு பாம்பு சீண்டியதையடுத்து மூலிகை மருந்தால் குணமானதாகவும், அதன் பிறகே மூலிகை தோட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.