TASMAC Shop: முதல்வர் விஜய், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதித்தும், கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மது பழக்கத்தால் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மற்றொரு புறம் கைப்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என ராமதாஸ், அன்புமணி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற இரண்டாவது நாளிலேயே முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
24
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
அதில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. முதல்வரின் அந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
34
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது
அடுத்த அதிரடியாக 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கவும் முதல்வர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கு ஏற்றார் போல திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குள் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் மோகன் தாஸை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஆனால் பல்வேறு கடைகளிலும் 10 மணிக்கு பின் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது. தற்போது இதனை தடுக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.