வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9, 10 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் உறைபனியும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால் காலை மற்றும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் கனமழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
25
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளைக்குள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
35
இன்று கனமழை எச்சரிக்கை
சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில் 1,020 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
55
12 செ.மீ முதல் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு
இதனிடையே தமிழ்நாட்டில் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.