நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள். இந்தியாவில் 65%க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தரமான விதைகள் மானியம், உர மானியம் ஆண்டுக்கு 6000 உதவி தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில்: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். அப்படி போகும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.
பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15,000 மானியமும், தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.5,400 மானியமும் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூர், உடுமலை, தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.