TN Marriage Assistance Schemes: தமிழக அரசு என்னென்ன திருமண உதவி திட்டங்களை வழங்குகிறது? தங்கம், பணம் எவ்வளவு?

First Published | Oct 1, 2024, 5:43 PM IST

Marriage Assistance Schemes: தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு உதவித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, திருமணத்திற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல வகையான நல உதவி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியில் இணையும் போது மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த திட்டங்கள் குறித்தும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம். 

Latest Videos


டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 

கைம்பெண்களின் மறுமணத்துக்கு நிதியுதவி அளிப்பதற்காக 1975ம் ஆண்டு முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மறுமணத்தின்போது பெண்ணுக்குக் குறைந்தபட்ச வயது 20ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவன் இறந்ததற்கான சான்று, மறுமணப் பத்திரிகை, வயதுச்சான்று ஆகியவை இருக்க வேண்டும்.  வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 

கல்வித்தகுதி இல்லாத மறுமணம் செய்துக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியில் ரூ.15,000 வங்கி கணக்கிலும், ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 50,000 அதில் ரூ. 30,000 நேரடியாக வங்கி கணக்கிலும், ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மறுமணம் செய்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்

தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு வழங்கப்படும் திட்டமாகும்.  இந்த திட்டம் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. படிக்காத பெண்களாக இருந்தால் ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. டிகிரி மற்றும் டிப்ளமோ படித்துள்ள பெண்கள் என்றால் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் இருப்பின் திருமணத்துக்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண உதவித்திட்டம்

ஏழை கைம்பெண்களின் மகளின் திருமணத்தை நடத்த உதவுவதற்காக 1981ம் ஆண்டு முதல் இந்த திட்டம்  கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணப்பெண் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. அதன்படி பட்டதாரிப் பெண்கள் என்றால் ரூ.50,000 காசோலையும், மற்றப் பெண்களுக்கு ரூ.25,000 காசோலை வழங்கப்படுகிறது. இதுகூடவே தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்

ஏழைப் பெண்களின் கல்வி மற்றும் திருமண உதவிக்காக 1989ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து இருந்தால் ரூ.50,000 காசோலையும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25,000 காசோலையும் இத்திட்டத்தின்கீழ் திருமண நிதியுதவியாக வழங்கப்படுகிறது. பழங்குடியினர் எனில் ஐந்தாம் வகுப்புப் படித்து இருந்தால் போதும். மேலும், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதற்குக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-த்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். மணப்பெண்ணுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1967ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. திருமணத்தின்போது மணப்பெண் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியரில் ஒருவர் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் வேறு வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அல்லது ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

பட்டப்படிப்பு படித்து இருந்தால் ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். மற்றப் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், ரூ.10,000 சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். கூடவே, தாலிக்காக 8 கிராம் தங்கம் வழங்கப்படும். திருமணம் செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் ரூபாய் 25,000 நிதியுதவியில் ரூ.15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிலும், ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. டிப்ளமோ, டிகிரி பெற்றவர்களாக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியில் ரூ.30 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கு மூலமாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் 22 கிராம் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. 

click me!