தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட வகைகளில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அனைத்து வகையான ஐஸ்கிரீம் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியது. மேலும் நடப்பாண்டின் மார்ச் மாதம் 65மிலி சாக்கோபாருக்கு 2.00ரூபாயும், 100மிலி கிளாசிக் கோன், 125மிலி வெண்ணிலா பால் ஐஸ்கிரீம் வகைகளுக்கு 5.00ரூபாயும் என சிறிதளவு விற்பனை விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம் தற்போது 65மிலி சாக்கோபார் (5.00ரூபாய்) தொடங்கி 1000மிலி வெண்ணிலா (70.00ரூபாய்) உள்ளிட்ட ஒவ்வொரு வகையான ஐஸ்கிரீம்களுக்கும் அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வானது அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. ஆனால், திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4500மிலி Bulk ஐஸ்கிரீம் வகைகள் 80.00 ரூபாய் முதல் 100.00 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. மேலும் இதுவரை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கான லாபத்தொகை 10%லிருந்து 25% ஆகவும், ஆவின் பாலகங்கள், ஆவின் FROக்கள், முகவர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கான லாபத்தொகை 10%லிருந்து 25% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: 13ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை! எதற்காக தெரியுமா?
இதனிடையே பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத தருணத்தில் ஆவின் ஐஸ்கிரிம் விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐஸ்கிரீம் என்பது அத்தியாவசிய உணவுப் பொருளாக இல்லை என்றாலும் கூட பால் சார்ந்த உபபொருள் என்பதால் பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத இந்த தருணத்தில் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம் ஆவினுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய இதுபோன்ற விற்பனை விலை உயர்வு தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம் என்றாலும் கூட பால் கொள்முதல் விலை உயர்வை அரசு அறிவிக்கும் சமயத்தில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த அனைத்து வகையான பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும் என்பதை ஆவின் நிர்வாக இயக்குநருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி அமுல் நிறுவனம் தாங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் பால் உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு பங்களிப்பு செல்கிறது என்பதை குறிப்பிடுவது போல் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் பால் உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு பங்களிப்பு செல்கிறது என்பதை தெளிவாக குறிப்பிட்ட வேண்டும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலை குறையாது? உயரப்போகுதாம்? என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்!
அத்துடன் திருச்சி, மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டாலும் அவை போதிய அளவு உற்பத்தி திறனை பூர்த்தி செய்யாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு நிலவி கொண்டே இருக்கிறது. எனவே தங்குதடையற்ற ஐஸ்கிரீம் உற்பத்தியை மேற்கொண்டு, தட்டுப்பாடற்ற விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், அடிக்கடி விற்பனை விலை உயர்வு மாற்றம் என்பது நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, விற்பனையாளர்களுக்கு கடும் சிரமத்தை உருவாக்கும் என்பதாலும், அதே சமயம் நீண்ட காலமாக விற்பனை விலையை மாற்றம் செய்யாமல் இருக்காமலும், ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து வகையான ஐஸ்கிரீம்களுக்கான விற்பனை விலையை ஒரே சீரான அளவில் உயர்த்தி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.