தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழைகள் பரவலான மழைப்பொழிவை கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடைந்த தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த மழையை கொடுக்கவில்லை. ஆனால், கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மாவட்டங்களுக்கு மட்டுமே நல்ல மழை பெய்தது. மற்றப்படி வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழையை விட வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே நள்ளிரவில் கனமழை பெய்கிறது.
அந்த வகையில், வருகின்ற 21-ம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சென்னையில் 350 மி.மீட்டர் கடந்தும் தமிழ்நாடு முழுவதும் 150 மி.மீட்டரை தாண்டியும் மழை பொழிந்துள்ளது. இது கடந்த காலங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. பெங்களூரில் தொடர்ந்து நல்ல மழை பெய்யும்.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள் முழுவதும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, கொடைக்கானல், விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் வரும் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளார்.