இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்த வாரத்தில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலும் பயிற்சி நடத்தப்படும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள். அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 07.05.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது
24
இந்தியாவில் போர் ஒத்திகை
இதன் தொடர்ச்சியாக, நேற்று 10.05.2025 சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை. வ. ஊ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
34
அணைகள், நீர் தேக்கங்களில் போர் ஒத்திகை
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில் ஆணையர்,
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.