Tamil Nadu Agriculture Budget 2026 : சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் கரும்பு விவசாயிகளுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வந்துள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களும், எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, கரும்பு சாகுபடியில் இயந்திர அறுவடையை ஊக்குவித்து, சாகுபடி செலவைக் குறைக்கும் வகையில் உயர்தர விளைச்சல் தரும் கரும்பு நாற்றுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். இதற்காக மாநில அரசின் சார்பில் ரூ.9.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 17,315 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கரும்பு சாகுபடி பரப்பை விரிவுபடுத்தவும், உற்பத்தித் திறனை உயர்த்தவும் தனித்துவமான கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ் பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.9 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.
அதேநேரத்தில், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி 100 கிலோலிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது எத்தனால் கலந்த E20 பெட்ரோல் குறித்து விவாதம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, அந்நியச் செலாவணியை சேமிக்கும் நோக்கில் மத்திய அரசு எத்தனால் கலந்த எரிபொருளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
ஆனால், பழைய வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என சில வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், E20 பெட்ரோல் பாதுகாப்பானது என்றும், அதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படாது என்றும் மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலையில், கரும்பு அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்குவதோடு, எதிர்கால உயிரி எரிபொருள் உற்பத்தியிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.