
சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் குடும்பத் தகராறு முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான வட்டாரங்களின் தகவலின்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார் என கூறப்படுகிறது.
மாறன் சகோதரர்கள் முரசொலி மாறனின் வாரிசுகள். முரசொலி மாறன் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த சகோதரி மகன். அதனால் மாறன் குடும்பம் நேரடியாக கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். சமீபத்தில் வெளியான சட்டநோட்டீசில் தயாநிதி மாறன் தனது சகோதரர் கலாநிதி மீது ஏமாற்று, மோசடி, பணம் பரிமாற்றம், கார்ப்பரேட் மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இது தங்கள் தந்தை முரசொலி மாறன் உடல்நிலை மோசமாக இருந்த சமயத்தில் 2003-ல் ஆரம்பமானதாகவும் கூறினார்.
2024 அக்டோபர் 7-ம் தேதி அனுப்பப்பட்ட முதல் நோட்டீசுக்கு கலாநிதி தரப்பில் தெளிவான பதில் எதுவும் வரவில்லை. ஆனால், அதன் பின்னர் கலாநிதி தனது சகோதரி அன்புகரசிக்கு ரூ.500 கோடி சமாதான தொகை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து தயாநிதி மாறனும் ஒருங்கிணைந்த பங்கு, சொத்துகள் மீட்பு மற்றும் பண ஒதுக்கீட்டை வலியுறுத்தியிருந்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக நடுவராகி இரு பக்கங்களையும் ஒரே மேஜையில் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தை உறுதி செய்துள்ளனர் என்று தெரிகிறது.இந்த சந்திப்பில், மாறன் சகோதரர்களின் சகோதரி அன்புகரசி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.தற்போது முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையின் பின், சகோதரர்கள் இடையே சமாதானம் முடிவடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த குடும்பத் தகராறு வெளிச்சத்துக்கு வந்ததும் Sun TV பங்கு விலை குறைந்தது. ஆனால், நிறுவன தரப்பு இது முழுக்க குடும்பத்தகராறு மட்டுமே, பங்குதாரர்களுக்கு தாக்கம் இல்லை என விளக்கமளித்தது.
இந்த சமாதானம் முழுமையானதா அல்லது தற்காலிகமாகமா என்பது இன்னும் தெரியவில்லை.கலாநிதி தரப்பில் எந்த அளவிற்கு பங்குகள் திருப்பிச் சென்றுள்ளன? ரூ.500 கோடி போல் புதிய பண சமாதானம் நடந்ததா?, வேறு சொத்துகள் பங்கீடு செய்யப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.இருவரின் உறவையும் மீட்டெடுக்க, தமிழக முதலமைச்சரும் திமுக தலைமையும் நேரடியா தலையிட்டு முயற்சி செய்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.