தமிழகத்தில் பல நாட்களாக வறண்ட வானிலை நிலவி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியைத் தாண்டிய நிலையில், வேலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கோடை மழை.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக வேலூரில் - 104, திருச்சி, தூத்துக்குடி- 102.2, மதுரை - 100.4 ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கத்தில் 96.08 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
25
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
35
நாளையும் இடி மின்னலுடன் மழை
அதேபோல் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெயிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமான வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றுடன் கூடிய கோடை மழை வெளுத்து வாங்கியது. வேலூர் நகர், காட்பாடி, சத்துவாச்சாரி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
55
மகிழ்ச்சியில் பொதுமக்கள்
அதேபோல் சேலத்தில் திடீரென இடி மின்னலுடன் பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாண் பிள்ளை பெற்றாள், பாக்கம், சே.பேட்டை, புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் வெயிலால் வெந்து தணிந்து வந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.