
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர் மின்வெட்டு தொடர்பாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: சில நாட்களாக திடீர் என்று மின்வெட்டு என்று பல செய்திகளையெல்லாம் வெளியிட்டு வந்தீர்கள். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால் என்னென்ன காரணங்களால் அதுபோன்று மின்சார தடைகள் ஏற்படுகிறது, மின்தடைகள் ஏற்படுகிறது என்று நம்முடைய மின்சார வாரியம் சார்பாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதெல்லாம் தான் காரணங்கள். அதாவது ஒரு சில இடத்தில் லோடு குறைவாக இருப்பதால் அந்த ஃபியூஸ் ஆஃப் ஆகிறது. ஒரு சில இடத்தில் லோடு அதிகமாக இருப்பதால் ட்ரிப்பிங் ஆகிறது. இதற்காக நிறைய இடத்திலிருந்து திடீர் என்று வரும் காரணத்தினால் நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் சென்னையில் மட்டும் ஏழு ராபிட் டீம் - இன்ஜினியர் டீம் ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்கள் வாகனங்களுடன் இன்ஜினியர்ஸ் எல்லாம் இருப்பார்கள்.
எங்கு அந்த மாதிரி பழுதுகள் வருகிறதோ உடனே சென்று அவர்களுக்கு அட்டென்ட் செய்வதற்கான வேலைகள் இருந்தது. சீப்ஃ இன்ஜினியரிங் லெவலில் அனைத்து அதிகாரிகளும்நேற்று இரவு முழுவதும் எல்லா இடத்திலும் சப்ஸ்டேஷன் எல்லா இடத்திலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டார்கள். அதன் மூலமாக பெரும்பாலான அந்த மாதிரியான எங்கெங்கெல்லாம் டெக்னிக்கல் இஸ்யூஸ் வந்ததோ அதெல்லாம் உடனே சரிசெய்யப்பட்டு, உடனே மின்சார தடை இல்லாமல் அங்கு கொடுக்கப்பட்டது. வேறு என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் வந்ததோ அதெல்லாம் சரி செய்வதற்கான வேலை நடந்தது. இன்றைக்கு நம்முடைய அனைத்து சி லெவல் அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு சப்ஸ்டேஷனிற்கும் சென்று நேரடியாக பார்வையிட்டு எங்கெல்லாம் வருகிறது.
ஏன் என்றால், நிறைய இடத்தில் பழைய ட்ரான்ஸ்பார்மர்ஸ். எல்லாம் லெகசி ட்ரான்ஸ்பார்மர்ஸ்கள் அதில் பிரச்சினை நிறைய இருக்கிறது. கேபிள்களில் நிறைய ஃபால்ட் வருகிறது. நிறைய இடத்தில் குழி தோண்டுவதால் கேபிள்கள் கட் செய்யப்படுகிறது. அதை தாண்டி ஒரு சில இடத்தில் அங்கிருக்கும் ஒரு சில தனி நபர்களுடைய தவறுகளால் ஒரு சில இடத்தில் மின்சாரங்கள் தடைபடுவதாக கணக்கிடப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக இன்றைக்குள் எடுக்கப்பட்டுவிடும். எங்கெல்லாம் அந்த மாதிரியான ஒரு தனி நபர்களுடைய தவறுகளால் இந்த மாதிரி நடக்கிறதோ அது யாருடைய தூண்டுதலால் செய்கிறார்கள், என்னவென்று தெரியவில்லை. அந்த மாதிரியான நபர்கள் மீது இன்று இரவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எல்லாம் யார் யார் என்று கணக்கிடும் பணிகள் நடந்து கொண்டு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் தெரியும். மின்சார வாரியம் 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நலிவடைந்து வந்து இன்றைக்கு கிட்டத்தட்ட 200 இலட்சம் கோடி கடனில் இருக்கிறது. ஒரு 1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் இன்றைக்கு 70,000 பேர் தான் வேலை பணிகளில் இருக்கிறார்கள். அதை தாண்டி பெரும்பாலான இடத்தில் டிரான்ஸ்பார்மர்கள் முதல் அனைத்தும் மிக பழைய டிரான்ஸ்பார்மர்களாக இருக்கிறது.
சப்ஸ்டேஷன்ஸ் எவ்வளவு உருவாக்க வேண்டும் என்று இவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு 235 உருவாக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு பெரும்பாலும் எந்த வேலையும் நடைபெறவில்லை. நிறைய இடத்தில் இன்னும் அதற்கான பணிகள் தான் செய்யப்பட்டு வருகிறது. இதை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரியான தடைகளை சரி செய்ய இப்போதைக்கு முடிந்த அளவு ஆங்காங்கே இன்ஜினியர்களை வைத்து ஒரு டீம் அமைத்து அந்த டீம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பெரும்பாலான இடத்தில் அதற்கான தடுக்கும் பணிகள் நடைபெற்று சிறப்பாக, உடனே அதற்கு ரெஸ்பான்ட் செய்து முடித்துவிட்டார்கள். மேலும் இதை சிறப்பாக செயல்பட எங்கெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறதோ, அதெல்லாம் சரி செய்யப்படும். ஏதாவது ஒரு தனி நபருடைய தவறுகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது பெரும்பாலான அங்கிருக்கின்ற நிர்வாகிகளும் சொல்லி இருக்கிறார்கள்.
அதிகாரிகளும் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் மேற்கொள்ளப்படும். மேலும், வெகு விரைவில் அனைத்தும் சீர் செய்யப்படும். ஏன் என்றால், மின்சார தட்டுப்பாடு என்ற செய்தி வந்தது. அந்த மாதிரி மின்சார தட்டுப்பாடு இல்லை. எல்லாமே நம்முடைய தேவைக்கேற்ப மின்சாரம் நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது. தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. கண்டிப்பாக இதை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும். ஏன் என்றால், எங்கெல்லாம் தவறுகள் நடைபெறுகிறது என்பதை சரி செய்துகொண்டு வருகிறோம். எங்கெல்லாம் நாம் சீரமைக்க வேண்டுமோ அதையும் சீரமைத்துக்கொண்டே வருகிறோம். விரைவில் எல்லாவற்றையும் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். ஆனால், இதற்கு சில நாட்கள் சில மாதங்கள் பிடிக்கலாம். ஆனால், கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.