மோடி அரபு நாடுகளில் பயணம் செய்யும்போது மசூதியை மூட முடியுமா.? கேள்வி கேட்கும் சீமான்
பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக மசூதி மினாரா மூடப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுக அரசின் சமத்துவமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக மசூதி மினாரா மூடப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுக அரசின் சமத்துவமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Pamban Mosque Minaret : பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழா வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மினாரவில் உள்ள அல்லாகு அக்பர் என்ற வாசகம் திடீரென தார்பாய் கொண்டு மறைக்கப்பட்டது. மோடியின் வருகையால் தான் மினராவில் உள்ள வார்த்தைகள் மூடப்பட்டதாக தகவல் வெளியானது.
பாம்பனுக்கு வரும் மோடி
ஆனால் கலங்கரை விளக்கம் போல் காட்சி அளிப்பதால் படகுகள், விமானங்கள் பாதிக்க கூடும் என்பதால் அனுமதி பெறும்படி அறிவுறுத்தியதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி ராமேஸவரம் வருகிறார் என்பதற்காக பாம்பனில் அமைந்துள்ள பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளில் மசூதியை மறைக்க முடியுமா.?
பிரதமர் மோடி அவர்கள் அரபு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்குள்ள மசூதியை இப்படி மூட முடியுமா? அரபு நாட்டிற்குச் சென்று அங்குக் கட்டப்பட்ட கோயிலைத் திறந்துவைத்து வணங்கி வரும் பிரதமர் மோடி அவர்கள், உள்நாட்டிற்கு வருகை தரும்போது மட்டும் மசூதியை மறைப்பது அப்பட்டமான பாசிச மனநிலையே அன்றி வேறென்ன?
தமிழ்நாடு காவல்துறைக்கு இத்தனை நாட்களாக கலங்கரை விளக்கம்போலத் தெரியாத மசூதி பெயர்ப்பலகை, இப்போது திடீரென கலங்கரை விளக்கம்போலவே தெரிவது எப்படி? மசூதியை மறைப்பது பாஜக அரசின் விருப்பமா? அல்லது திமுக அரசின் முடிவா? யாருக்குப் பயந்து, யாரை மகிழ்விக்க திமுக அரசு மசூதியை மூடுகிறது?
கோயில் விளக்கு தெரியவில்லையா.?
பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக மசூதியை மூடுகின்ற இதுவரை இல்லாத புதிய நடைமுறையை உருவாக்குவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? மசூதி விளக்கு கலங்கரை விளக்கம்போலத் தெரிந்த தமிழ்நாடு காவல்துறைக்கு கோயில் விளக்கு அப்படித் தெரியாமல் போனது ஏன்?
இதுதான் திமுக அரசு கட்டிகாக்கும் சமத்துவமா? கடைப்பிடிக்கும் சமநீதியா? சனாதனத்தை எதிர்க்கும் முறையா? ஆகவே, பிரதமர் மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு பாம்பன் மசூதி மினாரை துணியால் மூடி மறைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துவதாக சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.