School Student
தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பேருந்து அட்டை, இலவச சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, வெளிநாடு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜப்பானுக்கு சுற்றுபயணம் அழைத்து செல்லப்பட்டனர். இது மாணவர்கள் மத்தியில் நன்றாக படிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், அடுத்த முறை தங்களும் வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.
கனவு ஆசிரியர் திட்டம்
அதே நேரத்தில் மாணவர்களை மட்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லும் திட்டம் தொடங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அந்த வகையில் கனவு ஆசிரியர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 34 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் 22 உயர்நிலை மேல்நிலை பள்ளி என 54 ஆசிரியர்கள் இன்று (23ஆம் தேதி) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
வருகிற 28ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஆசிரியர்களை அவர்களின் குடும்பத்தினர் வழியனுப்பிவைத்தனர். இந்த வெளிநாடு பயணமானது ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது. இந்த கனவு ஆசிரியர்களுக்கான தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது,கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான கடினமான போட்டி
கனவு ஆசிரியர் திட்டத்திற்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 18,000 ஆசிரியர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு முதல் கட்டமாக இணைய வழியில் தேர்வு நடத்தப்பட்டது. அதில் இருந்து 2008 ஆசிரியர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் மாவட்ட அளவில் தேர்வு மையங்கள் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் கற்பித்தலின் நோக்கம், கற்பித்தலின் நவீன புதுமையான உத்திகள், கற்பித்தலுக்கு திட்டமிடல் போன்றவை சார்ந்த 20 வினாக்களும் கற்பித்தல் நுட்பம் தொடர்பாக 8 வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வு முடிவில் 992 ஆசிரியர்கள் மூன்றாம் கட்ட தேர்வுக்கு தயாராக தேர்வு செய்யப்பட்டனர்.
உள்ளூர் சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை
மூன்றாம் கட்ட தேர்வில் ஆசிரியர்களுடைய பேச்சாற்றல், பாடப்பொருள் சார்ந்த அறிவினை, கற்பித்தல் நுட்பங்கள், வகுப்பறை மேலாண்மை தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுகலை ஆசிரியர்கள் ஆக மொத்தம் 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கனவு ஆசிரியர் தேர்வு முடிவுகள் தேர்வு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்று விருதுகளும் வழங்கப்பட்டன. அதில் 75வது சதவீதங்கள் மதிப்பெண் பெற்ற 325 ஆசிரியர்கள் உள்நாட்டு கல்வி சுற்றுலாவிற்கும் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அழைத்து செல்லப்பட்டனர்
பிரான்ஸ் நாட்டிற்கு டூர்
90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து. இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த 55 ஆசிரியர்களும் வருகிற 28ஆம் தேதி வரை 6 நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சார்ந்த இடங்களை சுற்றிப்பார்க்கவுள்ளனர். இந்த புதிய திட்டத்தால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.