தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு (இ-மெயில்) மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
26
பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம்
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
36
மின்னஞ்சல் முகவரி
மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் ஒரு முக்கிய செயல்பாடாகும். ஏனெனில், மாணவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இணையத் தள சான்றிதழ் படிப்புகள் படிப்பதற்கும், உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவும் மின்னஞ்சல் முகவரி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
கடந்த கல்வியாண்டில் (2024-25) 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரியானது உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த கல்வியாண்டில் (2025-26), அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு மின்னஞ்சல் உருவாக்கப்படாத 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி ஆகஸ்டு 4ம் தேதி முதல் ஆகஸ்டு 29க்குள் உருவாக்கிக் கொடுத்திட சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
56
மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்
மின்னஞ்சலை உருவாக்கிய பின் மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது. மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச் சொல்லை (PASSWORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும் மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிகாட்டிடல் வேண்டும்.
66
உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு
ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnas@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன்" என்றும் உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் அனைத்தும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.