Published : Oct 05, 2024, 07:45 AM ISTUpdated : Oct 05, 2024, 07:47 AM IST
School Education Department: தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திங்கள் கிழமை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கியது. முதலில் காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டுமே என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறியிருந்தார்.
25
School ReOpen
இந்நிலையில் ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் திங்கள் கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதேபோன்று இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மேலும், விரைவில் பருவமழை தொடங்கவுள்ளது. இதற்கேற்ப பள்ளிகளில் முன்னெச்சரிக்கை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர இரண்டாம் பருவத்துக்கான கற்றல் - கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.