
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்த அதிமுக, இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ஓபிஎஸ் அணி ஒருபக்கம், சசிகலா அணி மறுபக்கம், தினகரன் அணி வேறுபக்கம் என அதிமுகவில் பல அணிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த ஒட்டுமொத்த அணிகளும் அதிமுகவை இப்போது கையில் வைத்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கின்றன.
இது எதற்கும் செவிசாய்க்காமல் எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், இப்போது அவரது அணிக்குள்ளேயே புகைச்சல் உருவாகி இருப்பது தான் இப்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆம்... முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கோவையில் அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். ''எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தான் நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன்'' என்று எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை செங்கோட்டையன் வெளிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகள் வரிசைகட்டி நிற்க, இப்போது அந்த பட்டியலில் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமன்றி அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவும், ''கட்சியில் தனக்கு மதிப்பில்லை'' என்று கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி அணியில் பிளவை அதிகரித்துள்ளது. மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதன் பின்னணியில் சசிகலா இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அதிக விசுவாசம் கொண்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உருவெடுக்க முக்கிய காரணம் சசிகலா தான்.
கைது செய்யப்படுகிறாரா சீமான்? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நியமிக்க இருந்தது செங்கோட்டையனை தான். ஆனால் விதி அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக கொண்டு வந்து விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும், சசிகலா மீதான செங்கோட்டையின் விசுவாசம் அப்படியே தொடர்ந்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சசிகலா ஆதரவாளர் என தெரிந்து தான் செங்கோட்டையனை பக்கத்தில் அதிகம் சேர்த்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இருவருக்கும் இடையே 'நீறுபூத்த நெருப்பாக' இருந்து வந்த விரிசல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க நேரம் காத்திருந்த சசிகலா, இப்போது செங்கோட்டையனை வைத்து புதிய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வாய்ப்பை ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் கெட்டியாக பிடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அணியை மேலும் ஆட்டம் காண வைக்க தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று கூறுவார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் ஏற்படுள்ள கலகம் அதிமுகவின் பிரதான எதிரியான திமுகவுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஏற்கெனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி இல்லை என கூறப்படும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள கலகம், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது.
'ஓசியில் பயணிக்கும் உங்களுக்கு எதுக்கு சீட்?' சென்னை பஸ்ஸில் பெண்களிடம் வம்பிழுத்த இளைஞர்கள்!