Published : Oct 04, 2024, 08:04 AM ISTUpdated : Oct 04, 2024, 08:06 AM IST
Pawan Kalyan Vs Udayanidhi Stalin: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஒரு ஆண்டுக்கு பிறகு சனாதனம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார். மேலும் பேசிய அவர் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் என பேசியிருந்தார்.
25
Udhayanidhi Stalin
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பீகார், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஒரு ஆண்டுக்கு பிறகு சனாதனம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
45
pawan kalyan
இந்நிலையில் ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் பொதுக்கூட்டத்தில் பேசுகையில்: இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள். எனவே தமிழில் கூறுகிறேன். அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
சனாதன தர்மத்தை யாரவது அழிக்க நினைத்தால், கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன் நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது என்று பேசியுள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் உதயநிதியை கடுமையாக விமர்சித்து சாபம் விடும் வகையில் பேசியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.