இன்னும் மழையின் ஆட்டம் முடியல! சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் ஏன்? அதிர்ச்சி தகவல் சொன்ன வானிலை இயக்குநர்!

First Published Oct 16, 2024, 4:58 PM IST

Red Alert For Chennai: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஆனால், எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஆந்திராவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும் என வானிலை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 138 மி.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 71 மி.மீ, இது இயல்பை விட  94% அதிகம் என்றார்.

Latest Videos


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும். 
 

அப்போது சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே எச்சரிக்கை என விளக்கம் அளித்தார்.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரைக்கு அருகே வரும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். 

அடுத்த 24 மணிநேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன. புயலாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

click me!