
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் இன்னும் சுமார் 60 நாட்களில் நாம் ஆட்சிக்கு வருவோம். தவெக தொண்டர்கள் அல்லது பொதுமக்கள் மீது தற்போதைய ஆட்சியில் போடப்பட்டுள்ள தேவையற்ற அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட FIR-களை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கிவிடுவோம் என உறுதி அளித்தார்.
இந்த பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. ஒரு தனிநபர் அல்லது ஒரு கட்சித் தலைவரால் சட்டப்பூர்வமாகப் பதியப்பட்ட FIR-களைத் தானாக டெலீட் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்த பேச்சை சட்டத்தை மீறும் செயல் என்றும் அதிகார திமிர் என்றும் விமர்சித்து வருகின்றன. அதே சமயம், அவரது ஆதரவாளர்கள் இது தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு பேச்சு என்றும், அநீதியான முறையில் போடப்பட்ட வழக்குகளைக் களைவதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அதே கட்சியில் உள்ள ரஞ்சனா நாச்சியார் ஆதவ் அர்ஜுனா பேசியதை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆதவ் அர்ஜுனா பொதுமக்கள் முன்னிலையில் "இன்னும் அறுபது நாட்களில் நாம் ஆட்சிக்கு வருவோம்; அதன் பிறகு எல்லா FIR-களையும் delete செய்து விடுவோம்" என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உரை மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உண்மையே என்னவென்றால் ஒரு FIR என்பது அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் அல்ல; அது சட்டத்தின் கீழ் நடைபெறும் குற்றவியல் செயல்முறை. அதை தவெக கட்சியின் முக்கியப்பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா "delete செய்து விடுவோம்" என்று பேசுவது சட்டத்தின் அடிப்படை அமைப்பை புரிந்துகொள்ளாத மனநிலையைக் காட்டுகிறது. இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் இளைஞர்களும், இளம் மாணவர்களும் மிகவும் தீவிரமாக கவனித்து வருகின்றனர். அந்த இளம் தலைமுறைக்கு அரசியல் என்ன கற்றுக்கொடுப்பது? சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதையா? அல்லது அதிகாரம் வந்தால் சட்டத்தை அழித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தையா?
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் "நாம் ஆட்சிக்கு வந்தால் நம் மாவட்ட செயலாளர்கள் மீது பதியப்படும் FIR-களை delete செய்து விடுவோம்" என்று பேசுவது அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றிய விழிப்புணர்வு அல்ல. அது இளைஞர்களை சட்டத்துக்கு எதிரான தவறான மனநிலைக்கு தள்ளும் அபாயகரமான அரசியல் மொழி. இந்த நாட்டில் சட்டம் நீதிமன்றங்களின் கீழ் இயங்குகிறது; அரசியல் வாக்குறுதிகளின் கீழ் அல்ல. எனவே இத்தகைய கருத்துகள் அரசியல் பொறுப்புடன் பேசப்பட வேண்டியவை.
நம் கட்சியின் தலைமை இத்தகைய கருத்துகளை பொது மேடைகளில் பேசும் நபர்களை ஊக்குவிக்கிறதா? ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அதில் அறிவு, பொறுப்பு, சட்ட விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஆனால் சட்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாத கருத்துக்கள் கட்சியின் மேடைகளில் பேசப்படத் தொடங்கினால், அது அந்த இயக்கத்திற்கே தீங்கு விளைவிக்கும். ஒரு அரசியல் தலைவர் தன்னைச் சுற்றி அறிவுடையவர்களை வைத்திருக்க வேண்டும். சட்டத்தை மதிக்கும், சமூக பொறுப்புள்ள ஆலோசனைகளை வழங்கும் நபர்களை அருகில் வைத்திருக்க வேண்டும். ஆனால் சட்டத்தின் அடிப்படை உண்மைகளை கூட புரிந்துகொள்ளாதவர்களின் பேச்சுகள் அரசியல் மேடைகளில் ஒலிக்கும்போது, அந்த இயக்கம் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இயல்பான விஷயமாகி விடுகிறது.
அரசியல் என்பது சினிமா வசனம் அல்ல. அது பொறுப்புடன் பேச வேண்டிய மேடை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு Rule of Law தான் மேலானது - Rule of Power அல்ல அதிகாரம் என்பது சட்டத்தை மீறும் உரிமை அல்ல; சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பு. தலைவர் விஜய் அவர்களுக்கு, நீங்கள் சிஎம் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். இல்லையேல் சரியான அரசியல் அறிவு உள்ளவர்களை அனுப்ப வேண்டும். கடின உழைப்பின்றி சிஎம் கனவு என்பது எட்டா கனியே'' என தெரிவித்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.
மேடையில் விஜய் குறிப்பிட்ட 'அது வொர்த் இல்லை' என்ற வார்த்தை அவரது மனைவியையோ அல்லது திருமண வாழ்க்கையையோ இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். ஒரு பக்கம் பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்குவதாக அறிவித்து பேசும் ஒருவர், மறுபக்கம் குடும்ப வாழ்க்கையில் பெண்களின் உரிமைகளை மதிக்காமல் இருப்பது முரண்பாடாக உள்ளது என்றும் ரஞ்சனா கூறியிருந்தார். வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கொண்டாடும் விஜய், மேடையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அதற்கேற்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மற்ற குழந்தைகளுக்கு தாய்மாமனாக சீர் கொடுப்பதற்கு முன்பு, தனது சொந்த குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சியில் இருப்பவர்களே தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருந்தால் அது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று ரஞ்சனா சாடியிருந்தது தமிழக மக்களின் பெரும் கவனத்தை பெற்றது. கட்சிக்குள் இருந்து கொண்டே அவர் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவது தவெகவில் பிரளயத்தை கிளப்பி உள்ளது. அவர் திமுகவில் இணைய உள்ளதால் இப்படி பேசுகிறார் என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.