தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 250 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் படி திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமின் போது திமுக அரசின் திட்டங்களையும், தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும் உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின் என்ற மக்கள் நல திட்டங்களையும் அரசு சார்பாக செயல்படுத்தி வருகிறது. அதே நேரம் அதிமுகவும் திமுகவிடம் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் தட்டி பறிக்க பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது.
25
களத்தில் இறங்கிய எடப்பாடி
அடுத்தாக தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு முன்னதாகவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறியும் வருகிறார். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் பிரச்சாரத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி,
தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாஜகவும் தேர்தல் பணிகளை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
35
தமிழகத்தில் பிரதமர் மோடி
அந்த வகையில் பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி, திருச்சி, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ரூ. 450 கோடி ரூபாய் மதிப்பில் 17,340 சதுர மீட்டர் பரப்பளவில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கிவைத்தார்.
இதனுடன் சேர்த்து தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் மின்சாரத் துறை தொடர்பான திட்டங்கள் என ரூ. 4,900 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் அர்ப்பணித்தார்.அடுத்தாக கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நாளில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரைப் பயன்படுத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது தமிழகத்தின் பெருமைகளை எடுத்துரைத்து பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.
இதற்கான தேதி தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வருகை தர இருபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து பிரதமர் மோடி நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
55
பாஜக- அதிமுக கூட்டம்- மோடி பங்கேற்பு.?
மேலும் அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் உதயமாகியுள்ள நிலையில் பாஜக சார்பில் திருச்சியில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியின் அடுத்தடுத்து தமிழக பயணம் பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் தமிழகம் வந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.