AIADMK alliance with Vijay's party : திமுகவை வீழ்த்த நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயன்று வருகிறது. கரூர் சம்பவத்தால் விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரம் காட்டி வருகிறது அரசியல் கட்சிகள் அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க அதிமுக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த சூழலில் தான் கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தவெக தலைவர் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
24
விஜய்க்கு ஆதரவாக அதிமுக
பொதுமக்களின் உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய்யின் காலதாமதம் தான் காரணம் என போலீசார் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக அதிமுக களம் இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே விஜய்க்கு ஆதரவாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ள கூட்டத்திலும் தவெக கொடிகளோடு தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் தவெகவிற்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
34
தவெகவிற்கு ஆதராக குரல் கொடுப்போம்
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்க கூட்டம் நடைபெற்றது. அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசிக்கொண்டிருந்த போது, வானில் விமானம் பறந்தது அந்த சத்தத்தை கேட்ட அனைவரும் மேலே பார்த்தனர்.
இதனை பார்த்த பொள்ளாச்சி ஜெயராமன் முதலில் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டார்கள். இப்போது பிளைட் விடுகிறார்கள் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டால் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்.
தவெக தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் ஸ்டாலின் போலீஸ் ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது. தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும் என தெரிவித்தார். ஜனநாயகத்தை காக்க, சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடியார் செய்து வருகிறார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், அதிமுக கூட்டத்தில் தவெகவினர் வந்தது பிள்ளையார் சுழி என்றும் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.