பட்டாசு கம்மி விலையில் கொடுக்கிறோம்னு சொல்லுவாங்க நம்பிடாதீங்க.! வெளியான ஷாக் தகவல்

First Published | Oct 23, 2024, 7:29 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடிகள் அதிகரித்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல், போலியான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பணத்தை சுரண்டுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்- ஆன்லைன் மோசடி

நவீன யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் இருக்கிற இடத்தில் இருந்து எந்த பொருட்களையும் ஒரே நிமிடத்தில் வாங்கி விட முடியும். அப்படி உச்சத்திற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு இணையாக மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி போலியான விளம்பரங்கள் மூலம் ஏமாற்றும் செயல் தொடங்கியுள்ளது.தற்போது பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் குறைவான விலையில், தள்ளுபடி விலையில் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர்.  

crackers

சைபர் கிரைம் எச்சரிக்கை

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி, இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் (www.cybercrime.gov.in) இந்த பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவளி காலத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடிகள் அதிகரித்திருப்பதாக தமிழ்நாட்டின் சைபர்கிரைம் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். 

Tap to resize

மோசடி எவ்வாறு செயல்படுகிறது:

தீபாவளி போன்ற பண்டிகைக் கால ஷாப்பிங்கை குறிவைத்து இந்த மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக  தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாகக் கவர்ச்சிகரமான மற்றும் லாபகரமாக விளம்பரங்களை போலியாக வடிவமைக்கின்றனர். மேலும் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில்  வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது கைப்பேசி அழைப்பு மூலமாகவோ தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி எமாற்றுகிறார்கள்.

அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது (www.kannancrackers.in, www.sunrisecrackers.com) பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர். இந்த இணையத்தளங்கள் வெளிதோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புபட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.

கம்மி விலையில் பட்டாசு

பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்துகாண்பிக்கப்படும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுறது. கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிகாரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிப்பது எப்படி.? 

பணம் செலுத்தும் முன் ஆன்லைன் விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து, அவர்களிடம் முறையான முகவரிகள் மற்றும் தகவல் தொடர்பு இருப்பதை உறுதிசெய்யவும்.  வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் மற்றும் "வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள்" குறித்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் இவை பெரும்பாலும் மோசடிகளைக் குறிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrimegov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!